இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஷீயாக்களின் ஊடுருவல் அதிகரிப்பு!

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஷீயாக்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாக அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின தலைவர் அஷ்ஷெய்க்.எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்திருந்த உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான விசேட செயலமர்வு நேற்று சனிக்கிழமை சாய்நதமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமை வகித்து உரையாற்றும் போதே அஷ்ஷெய்க்.எஸ்.எச்.ஆதம்பாவா இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது..
“எமது நாட்டில் தற்போது ஷீயா கொள்கை மிகவும் தீவிரமாக பரப்பப்பட்டு வருகிறது. எமது பிரதேசங்களிலும் இது வேகமாக பரவி வருகின்றது. இதற்கான முயற்சிகள் பல்வேறு ரூபங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. எந்தளவுக்கு என்று சொன்னால் புலமைப்பரிசில் என்ற போர்வையில் எமது பிள்ளைகளின் உள்ளங்களில் ஷீயாக்களின் நச்சுக் கருத்துகள் விதைக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து எமது சமூகம் விளிப்பூட்டப்பட வேண்டும்.

நாம் சஹாபாக்களை சரிசமனாக மதிக்கின்றோம், கண்ணியப்படுத்துகின்றோம். நேசிக்கின்றோம். குறிப்பாக கலீபாக்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரலி) போன்றோரில் எவரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பேசுவதில்லை. அவர்களது மனைவிமாரையும் மதிக்கின்றோம். ஆனால் ஷீயாக் கொள்கையானது இந்த சஹாபாக்களை மிகவும் மோசமாக விமர்சிக்கின்றது. இந்த நச்சுக் கருத்துகள் எமது மக்கள் மத்தியில் பரப்பபடுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.
பள்ளிவாசல் பொறுப்புதாரிகளும் உலமாக்களும் மார்க்கத்தின் பாதுகாவலர்கள். நாங்கள் இவ்விடயங்களில் மிகக் கவனமாக இருந்து சமூகத்தை வழிநடாத்த கடமைப்பட்டிருக்கின்றோம். ஷீயா விடயத்தில் இரு தரப்பினரும் இணைந்து எமது சமூகத்தில் அவர்களின் ஊடுருவலை முற்றாக இல்லாதொழிக்க பாடுபட வேண்டும். இது தொடர்பான விரிவான விளக்கங்களை அளிப்பதற்காகவே இவ்விடயத்தில் பாண்டித்துவம் பெற்றுள்ள அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.இஸ்மாயில் அவர்களை இந்த செயலமர்வுக்கு அழைத்து வந்துள்ளோம்.
அதேவேளை ரமழான் வந்து விட்டால் தலைப்பிறையில் தொடங்கி பெருநாள் வரை அனைத்து விடயங்களிலும் பிரச்சினைகள் எழுகின்ற சமூகமாக நாம் மாறியிருக்கின்றோம் அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்துகின்ற இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுகின்ற நாங்கள் வீண் சர்ச்சைகளுக்குள் சிக்கித் தவிக்கின்றோம். அதனால் தான் இந்த அமர்வில் நாம் சில பிரகடனங்களை மேற்கொள்கின்றோம்.
அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா கடந்த பல வருடங்களாக நிறைய நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இன்ஷா அல்லாஹ் எமது பணிகள் எதிர்காலங்களில் தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திப்போம்” என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை தாருஸ்ஸலாம் அறபுக் கலாபீட அதிபர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.இஸ்மாயில் ஸஹாபாக்களின சிறப்புக்கள் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். இதன்போது ஷீயாக்களின் கொள்கை, கோட்பாடுகள் தொடர்பாக சுமார் ஒரு மணித்தியாலம் கொண்ட சமர்ப்பணம் ஒன்றை வீடியோ காட்சிகளுடன் சமர்ப்பித்தார்.

இதன் பின்னர் பேருவலை ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க்.எஸ்.எச்.எம்.பளீல், வரலாற்றுக் காலத்திலிருந்து மஸ்ஜிதுகளின பங்கும் பரிபாலகர்களின் பொறுப்புக்கள மற்றும் கடமைகளும் எனற தலைப்பில் கருத்துரை வழங்கினார். இதன்போது ஒரு பள்ளிவாசல் எத்தகைய அம்சங்களை கொண்டதாக இருக்க வேண்டும்? அதன் பொறுப்புதாரிகளின் பணிகள், கடமைகள் பண்புகள் எவ்வாறானதாக அமைதல் வேண்டும் என்பன குறித்து சுமார் ஒரு மணித்தியாலம் கொண்ட சமர்ப்பணத்தை பஹ்ரைன் அல்பைத், கிழக்கு லண்டன் மஸ்ஜித் ஆகிய பள்ளிவாசல்களை முன்னுதாரணமாகக் கொண்டு விபரித்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளிவாசல் பொறுப்புதாரிகளின் பலம், பலவீனம், சந்தர்ப்பம், அச்சுறுத்தல் எனும் நான்கு தலைப்புகளில் குழுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
இரண்டாவது அமர்வில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டதுடன் அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் ரமழான் பிரகடனங்களும் வாசிக்கப்பட்டு அவை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து உலமாக்களும் பள்ளிவாசல் பொறுப்புதாரிகளும் இணைந்து செயற்படும் பொருட்டு பத்து பேரைக் கொண்ட செயற்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.

அம்பாறை மாவடட ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் யூ.எம்.நியாஸி நன்றியுரை நிகழ்த்தினார். முன்னாள் செயலாளர்களான அஷ்ஷெய்க் இஸட்ஏ.நதீர், அஷ்ஷெய்க்.எப.எம்.ஏ.அனஸார் மௌலானா( ஆகியோர் செயலமர்வை நெறிப்படுத்தினர்.
இந்த செயலமர்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஜும்ஆப் பள்ளிவாசல்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளும், ஜம்மியத்துல் உலமாவின் மாவட்ட சபையையும் கிளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி உலமாக்களும் பங்குபற்றினர்.

Post a Comment