ஷீஆக்கள் குறித்து எழுத விளைகின்ற பொழுது அவர்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் அலி, பாத்திமா, ஹஸன், ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹும் போன்றவர்களுக்கு எதிரிகள் எனக் காட்ட விளைகின்றனர். உண்மை அவ்வாறல்ல. அல்லாஹ்வின் தூதரையும், அவர்களது தோழரையும் அதிலும் குறிப்பாக அன்னாரது குடும்பத்தையும் நாங்களும் மதிக்கிறோம். அவர்களை அல்லாஹ்வின் தூதர் எவ்வாறெல்லாம் சிறப்பித்தார்களோ அந்த சிறப்புகள் அனைத்தையும் நாங்களும் வழங்குகிறோம். 
அவர்கள் சுவனவாதிகள் என்பதிலோ அல்லது அவர்கள் இறையன்புக்குப் பாத்திரமானவர்கள் என்பதிலோ எள்ளளவும் சந்தேகம் கிடையாது. அவர்களது ஈமான் வலுவானது என்பதிலும் கடைசி வரைக்கும் அந்த ஈமானோடு இருந்து இறைவனின் திருப்தியோடு இவ்வுலகை விட்டுச் சென்றார்கள் என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆனாலும், இல்லாத பொய்களைச் சொல்லி அவர்களை மேன்மைப் படுத்த வேண்டிய தேவை எங்களுக்குக் கிடையாது.
அலி (ரழி) அவர்களையும் குடும்பத்தையும் இறைத் தூதரை விட உயர்த்தவோ, இறைவனின் அந்தஸ்திற்குக் கொண்டு போய் வைக்கவோ நாங்கள் ஒருபோதும் உடன்பட மாட்டோம். ஜிப்ரீலின் ஆசானாய் அலியை சித்தரித்து அல்லாஹ்வின் தூதரே அதை அறியாமல் ஆச்சரியப்பட்டார் என நபியை மடையராக்கும் கொள்கையைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். அல்லாஹ்வின் தூதரின் குடும்பத்தாரை மதிக்கிறோம் எனக் கூறிக் கொண்டு அன்னார் சொன்ன லட்சக்கணக்கான ஹதீஸ்களுக்கு அப்பால் பொய்யாக பல செய்திகளை இட்டுக்கட்டிக் கொண்டு ஆதரவு தேடும் கொள்கையைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். 

ஈமான் எனும் உயர் சொத்தை உயிர் மூச்சாய் நினைக்கும் எம் மத்தியில் அதனை அரிக்க நினைக்கும் கரையான்கள் உருவாவதை எப்படி எம்மால் அனுமதிக்க முடியும்...??? நேசம் என்ற பெயரில் மோசம் போய் உயிரை விட மேலாய் நேசிக்க வேண்டியவரை வார்த்தைகளால் கொச்சைப்படுத்தும் கொள்கையை வளரவிட முடியுமா...??? இறைத் தூதருக்கெதிராய் கார்டூன் வரைந்தார்கள் என்பதற்காய் கொதித்தெழுந்து ஆரவாரித்த நாம் அல்லாஹ்வின் தூதர் விபச்சாரிகளோடு வாழ்ந்தார்கள் என்றும் நயவஞ்சகர்ளோடு நேசம் கொண்டார்கள் என்றும் நாக்கூசாமல் பேசியும், எழுதியும் வரும் ஒரு கொள்ளையை நினைக்கையில் எப்படி இரத்தம் கொதிக்காமல் இருக்க முடியும்...???

இறைத் தூதரை உயிரை விட மேலாக நேசிக்கும் சமூகமே, ஷீஆக்களின் இந்த விஷமக் கருத்தையும் கொஞ்சம் வாசியுங்கள். ஷீஆக்களின் அறிஞர்களில் பிரதானமானவரும், இப்னு ஸபஃ இன் பரம்பரையில் உதித்தவரும், அஷ்ஷைகுல் முபீத் எனப் பிரபல்யம் பெற்றவருமான முஹம்மத் பின் முஹம்மத் பின் நுஃமான் என்பவர் தனது "இக்திஸாஸ் " الاختصاص எனும் நூலின் 213 ம் பக்கத்தில் பின்வரும் செய்தியைப் பதிவு செய்கின்றார். 

"அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நான் ஒருமுறை பாத்திமா நாயகி அவர்களிடம் சென்று உங்கள் கணவர் எங்கே என வினவினேன். அதற்கவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவர்களை வானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் என்றார்கள். நான் எதற்காக வானத்திற்குச் சென்றுள்ளார்கள்? என வினவினேன். அதற்கவர்கள், மலக்குகளில் சிலர் ஒருவிடயத்தில் தமக்குள் முரண்பட்டுக் கொண்டனர். அப்போது மனிதர்களில் ஒருவரைத் தமக்கு நீதிபதியாகத் தருமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களே ஒருவரைத் தேர்வு செய்து கொள்ளுமாறு அவர்களுக்கு அல்லாஹ் வஹியறிவித்தான். அலி பின் அபீதாலிப் (அலை) அவர்களை மலக்குகள் தேர்ந்தெடுத்தார்கள் எனக் கூறினார்கள் "

எப்படி ஒரு செய்தி பார்த்தீர்களா...??? இறை கட்டளைக்கு மாற்றமே செய்யாத மலக்குகளுக்கு ஒரு நீதிபதி. இதை நம்ப வேண்டும். இல்லை என்றால் அஹ்லுல் பைத்கள் மீது அன்பற்றவர்கள். நடுநிலையாய் சிந்திக்கும் ஷீஆ அண்பர்களே, இது உங்கள் சிந்தனைக்கும் தான்...

Post a Comment