ஷீஆக்களின் உண்மை முகத்தை அவர்களது நூற்களில் இருந்தே அடையாளம் காட்டும் எமது தொடரில் அவர்களது அறிஞர் கொட்டி வைத்திருக்கின்ற சில உலரல்கள் குறித்து நோக்கி வருகிறோம். அந்த வகையில் அதன் முன்னும் பின்னும் அசத்தியங்களோ, கையாடல்களோ நுழையாமல் பாதுகாக்கப் படும் என அல்லாஹ்வால் வாக்களிக்கப் பட்ட அல் குர்ஆனின் உண்மைத் தன்மையை கேள்விக்கு உட்படுத்தி மூலாதாரத்தையே மூடி மறைக்க முனையும் ஷீஆக்களின் முயற்சிகளை இங்கு பார்த்து வருகிறோம். 
ஷீஆக்களின் மகத்தான ஆயத்துல்லாஹ் எனப் படுபவரும், ஹிஜ்ரி 1333 இல் பிறந்தவரும், முஜ்தஹித், முஹத்தித், புகஹாக்களின் தலைவர் என்றெல்லாம் ஷீஆ அறிஞர்களால் புகழப்பட்ட அல்லாமா அல்பாFனீ அல் அஸ்பஹானீ என்பவர் தனது "ஆராஉன் ஹௌலல் குர்ஆன் " எனும் நூலில் பின் ருமாறு குறிப்பிடுகின்றார். (மூல வாசகங்கள் புகைப்படத்தில்)

"ஐந்தாவது வினா: அல்குர்ஆனில் மாற்றம் உள்ளது என்று கூறுபவர்கள் யார்? அவர்களது ஆதாரங்கள் என்ன? " இந்த வினாவுக்கு பின்வருமாறு விடையளிக்கின்றார். " முஹத்திதீன்கள் எனும் ஹதீஸ் கலை அறிஞர்களில் ஒரு கூட்டமும், செய்திகளை மனனமிடுபவர்களில் ஒரு கூட்டமும் குறைவை ஏற்படுத்தி மாற்றம் நிகழ்ந்துள்ளது என அபிப்பிராயப் படுகின்றனர். 
நான் அறிந்த வகையில் அவர்களில் முதலாமவராக அலி பின் இப்றாஹீம் என்பவர் தனது தப்ஸீரில் குறிப்பிடுகின்றார். அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. அபுல் ஹசன் அலி பின் இப்றாஹீம் அல் ஹாஷிமீ அல் கும்மீ என்பவர் கூறுகின்றார். அல் குர்ஆனில் மாற்றப்பட்ட வசனங்களும் சட்டத்தை மாற்றக் கூடிய வசனங்களும் உண்டு. அதில் தொடர்பு இல்லாமல் போன வசனங்களும், இணைக்கப்பட்ட வசனங்களும், அல்லாஹ் இறக்கியதற்கு மாற்றமாக ஒரு எழுத்திற்குப் பதிலாக இன்னுமொரு எழுத்து மாற்றப்பட்ட வசனங்களும் உண்டு" என்று குறிப்பிட்டு விட்டு சில குர்ஆனிய வசனங்களை மேற்கோள் காட்டுகின்றார்.

அவற்றில், அந் நிஸா : 166 வது வசனத்தில் "பீ அலீய்யின் " என்ற வார்த்தையும் அல்மாயிதா : 70 வது வசனத்திலும் "பீ அலிய்யின் " என்ற வார்த்தையும் அதே போன்று அந் நிஸா : 167, அஷ் ஷுஅரா : 227, அல் அன்ஆம் : 93 ஆகிய வசனங்களில் "ஆல முஹம்மதின் ஹக்கஹும் " எனும் வார்த்தையும் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறே குலைனீ எனும் மற்றுமொரு அறிஞரும் குறிப்பிடுவதாக அஸ்பஹானீ தனது நூலில் மேற்கோள் காட்டுகின்றார்.
மதிப்புக்குரியவர்களே, இமாமுல் முபஸ்ஸிரீன் என்றும் இமாமுல் முஹத்திதீன் என்றும் ஷீஆக்களால் வர்ணிக்கப் படும் இருவரது கூற்றை மேற்கோள் காட்டி செய்யிதுல் புகஹா என வர்ணிக்கப்பட்டவர் பேசுகிறார். இது தான் அவர்களது கொள்கை என்பதற்கு இதைவிட என்ன சான்று இருக்க முடியும். நாங்கள் குர்ஆனை ஏற்றுக் கொள்கிறோம் என வாதாடும் ஷீஆ சகோதரர்களே, கேடுகெட்ட அந்த சிந்தனையில் இருந்து வெளிவாருங்கள். மாற்றமில்லா வேதத்தை மனதார பின்பற்றுவோம்.
தொடரும்...

Post a Comment